கோடங்கிபாளையம் கிராமத்தில் புதிதாக ஐந்து கல்குவாரிகள் திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
கோடங்கிபாளையம் கிராமத்தில் புதிதாக ஐந்து கல்குவாரிகள் திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு-பொய்யான ஆய்வகம் அளித்த அறிக்கையை சமர்ப்பித்த கல்குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கோடங்கிபாளையம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் பல குவாரிகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையிலும் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கோடங்கிபாளையம் கிராமத்தில் புதிதாக ஐந்து கல்குவாரிகளுக்கு உரிமம் கேட்டு இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அப்பகுதி மக்கள் கல்குவாரி உரிமையாளர்கள் குவாரி அமையும் இடத்தில் இருந்து அரசு விதிகள் படி வீடுகள் நீரோடைகள் இருப்பதை மறைத்து சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு அறிக்கை அளித்துள்ளனர் எனவும் ஏற்கனவே அரசு விதிகளை பின்பற்றாமல் பல்வேறு குவாரிகள் கோடங்கிபாளையம் கிராமத்தில் இயங்கி வருவதால் புதிதாக கல்குவாரிகளுக்கு உரிமம் அளிக்கக்கூடாது எனவும் ஒவ்வொரு நாளும் அச்சத்தில் வாழ்க்கையை நகர்த்தி கொண்டுள்ளதாகவும் கடும் எதிர்ப்பினை பதிவு செய்தனர். மேலும் கல்குவாரிகளுக்கு பொய்யான அறிக்கைகளை தயார் செய்து கொடுக்கும் அரசின் அனுமதி பெறாத ஒமேகா ஆய்வகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.